ஹைதராபாத்: இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று அஞ்சலி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.
இயக்குனர் களஞ்சியம் தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை அஞ்சலி புகார் தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த களஞ்சியம் அஞ்சலி மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை பல முறை நடந்துள்ளது. ஆனால் அஞ்சலி ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தும் அவர் வரவில்லை. அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஞ்சலிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரால் வர முடியவில்லை என்றார்.
இதையடுத்து அஞ்சலிக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அஞ்சலி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்பது பற்றி அஞ்சலி ஹைதராபாத்தில் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம். பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாமல் நீதிமன்றத்தில் சரண் அடைந்து பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரலாமா அல்லது மருத்துவ சான்றிதழ் அளிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறாராம்.