பிரியமுடன், ஆட்டோகிராப், காதல், வழக்கு எண் 18/9 ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன், "கோலி சோடா" என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார்.
அந்த படத்தை பற்றி அவர் கூறுகிறார்:
ஒரு காலை நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட் போயிருந்தேன். யதேச்சையாக கடைகளுக்கு மேலே இருந்த பரணைப் பார்த்தேன். அதில் வரிசையாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த காட்சி எனக்கு ஆயிரம் கதைகள் சொன்னது.
அந்த இளைஞர்களுக்கு இந்த மார்க்கெட்டை தாண்டி வேறு எதுவும் தெரியாது. அவர்களுக்கு எந்த அடையாளமும் கிடையாது. நமக்கான அடையாளம் என்ன? என்று அவர்கள் யோசிக்கும்போது, கதை ஆரம்பிக்கிறது. இதனால் நமக்கு பிரச்சினை வந்து விடுமோ? என்று கடை முதலாளிகள் யோசிக்கும்போது, பிரச்சினை ஆரம்பிக்கிறது. இப்படி இரண்டு வேறு வேறு எண்ணங்களின் மோதல்தான், "கோலி சோடா"
"பசங்க" படத்தில் நடித்த 4 சிறுவர்களும் இப்போது இளைஞர்களாக வளர்ந்திருக்கிறார்கள். அவர்களையே நடிக்க வைத்து இருக்கிறேன்.
அருணகிரி இசையமைத்து இருக்கிறார். சீலின், பின்னணி இசையமைத்துள்ளார். கானா பாலா, பாடல்களை எழுதியிருக்கிறார். என்.லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ், ரப் நோட் ஆகிய 2 பட நிறுவனங்கள் சார்பில் என்.சுபாஷ் சந்திரபோஸ், பரத் சீனி ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு, எடிட்டிங், டப்பிங் பணிகள் முடிவடைந்தன. படம், அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வர இருக்கிறது.